Sunday 26 May 2013

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்.

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்.


காய்ச்சல் இருக்கும் போது சாப்பிடவே பிடிக்காது. அந்த நேரம் மருந்து மாத்திரைகள் மட்டும் தவறாமல் எடுத்துக் கொண்டு இருப்போம். இருப்பினும் மருந்து மாத்திரைகள் போட வேண்டுமென்று உணவுகளை சாப்பிட்டாலும், அவை வெளியே வந்துவிடும். இதற்கு காரணம் அதிகப்படியான காய்ச்சல், செரிமான கோளாறு மற்றும் நாவில் சுவையின்மை தான். ஆனால் அவ்வாறு சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல், மேலும் தான் காய்ச்சலானது நீடிக்குமே தவிர, குணமாகாது.
மேலும் காய்ச்சலின் போது சாப்பிடக்கூடிய சில உணவுகள் உள்ளன. அவை உடலுக்கு சத்துக்களை வழங்குவதோடு, காய்ச்சலை சீக்கிரம் போக்கவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. பொதுவாக காய்ச்சல் இருக்கும் போது அனைவரும் கஞ்சியைத் தான் சாப்பிடுவோம். அவை மட்டுமின்றி, இன்னும் வேறு சில உணவுகளும் உள்ளன.
அத்தகைய இந்திய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, காய்ச்சல் இருக்கும் போது சாப்பிட்டு, காய்ச்சலில் இருந்து சீக்கிரம் விடைபெறுங்கள்.

சப்பாத்தி

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த நவதானியங்களால் ஆன சப்பாத்தியை, காய்ச்சலின் போது சாப்பிட்டால், சாப்பிடுவதற்கு நன்றாக இருப்பதோடு, செரிமானப் பிரச்சனையும் வராது. மேலும் இவ்வாறு சுடும் சப்பாத்தியில் எண்ணெய்/நெய் சேர்ப்பதை தவிர்க்கவும்.

சாதம்

காய்ச்சலின் போது சாதத்தை கஞ்சி போல் செய்து சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனையை உண்டாக்காமல் இருப்பதோடு, உடலில் இருந்து வெளியேறிய நீர்ச்சத்தையும் அதிகரிக்கும்.

சூப்

காய்ச்சல் ஏற்படுவதற்கு சளி மற்றும் ஜலதோஷமும் ஒரு காரணம். எனவே இத்தகைய சளி மற்றும் ஜலதோஷத்தை, ஒரு பௌல் சூடான தக்காளி அல்லது கேரட் சூப் குடிப்பதன் மூலம் குணமாக்கலாம். அதுமட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

கிச்சடி

காய்ச்சலின் போது சாப்பிடுவதற்கு கிச்சடியும் சிறந்த உணவு தான். இந்த இந்திய உணவு மென்மையாகவும், செரிமானத்தை எளிமையாகவும், குறைந்த கலோரிகளை கொண்டுள்ளதாகவும் இருக்கிறது.

உருளைக்கிழங்கு

வேக வைத்த உருளைக்கிழங்கில், மிளகு தூள் மற்றும் கிராம்பு தூள் சேர்த்து, காய்ச்சலின் போது சாப்பிட்டால், சளி மற்றும் ஜலதோஷத்திலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிவப்பு மற்றும் வெள்ளை இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, உடலில் உள்ள பாக்டீரியா சீக்கிரம் அழிந்துவிடும்.

பழச் சாறு

உடல் வெப்பமானது அதிகமாக இருக்கும் போது, பானங்களுள் தண்ணீர் மற்றும் பழச் சாற்றை குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்குவதோடு, வயிறும் நிறையும். குறிப்பாக பழச் சாற்றினை குளிர்ச்சியின்றி பருக வேண்டும்.

துளசி டீ

இந்த மூலிகை டீயை குடித்தால், சளி, ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த டீயை காய்ச்சலின் போது குடித்தால், சோர்ந்து இருக்கும் மனமானது புத்துணர்ச்சி அடையும்.

முட்டை

வேக வைத்த முட்டையை காய்ச்சலின் போது சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, ஆன்டி-பாடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பால்

பாலில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே காய்ச்சலாக இருக்கும் போது, உடலுக்கு வேண்டிய சத்தும், வலிமையும் கிடைக்க வேண்டுமெனில், கொதிக்க வைத்த பாலை குடிக்க வேண்டும்.
சென்னா (Chenna)
இந்தியன் காட்டேஜ் சீஸ், காய்ச்சலின் போது சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று. இதனை இந்த நேரத்தில் சாப்பிட்டால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அதற்கு காட்டேஜ் சீஸை துருவி அதில் சர்க்கரை சேர்த்த சாப்பிடவும்.

கோதுமை ரவை

கோதுமை ரவையில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து வேக வைத்து சாப்பிட்டாலும், காய்ச்சலின் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். மேலும் செரிமானமும் நன்கு நடைபெறும்.

அவல்

காய்ச்சல் இருக்கும் போது, அவலை ஒரு கலவை சாதம் போல் காய்கறிகள் மற்றும் லேசான காரம் சேர்த்து சமைத்து சாப்பிடுவதும் ஒரு நல்ல உணவாக இருக்கும்.

தயிர் சாதம்

சளியினால் ஏற்பட்ட காய்ச்சலின் போது, தயிர் சாதத்தை சாப்பிட்டால், தொண்டை புண் குணமாகும். குறிப்பாக குளிர்ச்சியாக இருக்கும் தயிர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இல்லையெனில் இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

No comments:

Post a Comment